Saturday, 6 June 2015


திருக்குறள் கல்வெட்டுக்கள்
ஈரோடு மாவட்டம் மலையப்பாளையத்திலுள்ள மலையில்1330 திருக்குறள்களையும் உரிய விளக்கங்களுடன் கல்வெட்டுக்களாக பொறிக்கவேண்டும் என்று குறள் மலைச்சங்கம் பல ஆண்டுகளாக தமிழ்நாடு அரசுக்கு தொடர்ந்து மனு அளித்துவந்தது. இது சம்பந்தமாக பல கூட்டங்களையும் மாநாடுகளையும் இச்சங்கம் நடத்தி வருகிறது. அதன் பயனாக 11.02,2014 அன்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் தலைமையில் கோபிசெட்டிபாளையம் ஆர்.டி.ஓ, தாசில்தார் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் இந்த குறள் மலையை ஆய்வு செய்தனர். அப்போது மலையில் அமைக்கப்பட்டிருந்த மாதிரிக்கல்வெட்டுக்களைப் பார்த்து பிரமிப்படைந்தனர். அதோடு 1330 திருக்குறள்களையும் கல்வெட்டுக்களாகப் பொறிப்பதற்கு இந்த மலை மிகவும் பொருத்தமாக மலையாக உள்ளது என்றும், இது சம்பந்தப்பட்ட ஆய்வு அறிக்கையை விரைவில் அரசுக்கு சமர்ப்பிப்போம் என்று கூறிச்சென்றனர்.
மெலும்  இது சம்பந்தமாக பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இறுதியாக தமிழ் வளர்ச்சித்துறையின் இணைஇயக்குநர் திருமதி சந்திரா அவர்கள், ஊரக வளர்ச்சித்துறையின் தலைமை செயற்பொறியாளர் திரு எஸ்.சேகர் அவர்கள், இந்து அறநிலையத்துறை இணைஆணையர் அவர்கள் மற்றும் இ.ஓ திருமதி மாலா அவர்கள் மேலும் பொதுநல ஆர்வலர் சத்தியமங்கலத்தைச் சேர்ந்த திரு.எம்.இரத்தினம் அவர்கள் ஆகியோர் கொண்ட நால்வர் குழுவை நியமித்து அரசு ஆய்வு செய்யப்பணித்தது.
அதன்படி மேற்படி அரசு அதிகாரிகள் அனைவரும் 14.05.2015 வியாழன்று குறள்மலையை ஆய்வுசெய்தனர். ஆய்வின்முடிவில் திருக்குறள் கல்வெட்டுக்கள் அமைக்க இந்த இடம் மிகப்பொருத்தமாக அமைந்துள்ளது என்றும் இது சம்பந்தப்பட்ட இறுதி அறிக்கையை விரைவில் நாங்கள் அரசுக்குச் சமர்ப்பிப்போம் என்றும் கூறிச்சென்றனர்.
ஆய்வின்போது அரசு அதிகாரிகளுடன் குறள் மலைச்சங்கத்தினர், மாமல்லபுரம் சிற்பி அரவிந்தன், ஊராட்சி ஒன்றியத்தலைவர் திரு.சத்திரத்தினம், கவுன்சிலர் கண்ணன் மற்றும் ஊர்ப்பொதுமக்கள் உடனிருந்தனர்.
எங்களது கோரிக்கையை அரசு மிகவும் ஆர்வத்துடன் பரிசீலித்து வருகிறது. குறள் மலை அமைப்பதற்கான அனைத்து சாத்தியக்கூறுகளையும் பல நாட்டு அறிஞர்களுடன் கலந்தாய்வுசெய்து, தெளிவாக அரசிடம் சமர்ப்பித்துவிட்டோம். அரசின் ஆய்வுகளும் இறுதிநிலையை அடைந்துள்ளது. ஆகவே அரசாணை வெளியிடப்படும் நாளை ஆவலுடன் எதிபார்த்துக் காத்திருக்கிறோம். 1330 குறள்களையும் விளக்கங்களுடன் கல்வெட்டுக்களாக்கி திறப்புவிழாவிற்கான திறவுகோளை இரண்டே ஆண்டுகளில் அரசிடம் ஒப்படைப்போம் என்று உறுதியளித்திருக்கிறோம். மாமல்லபுரம் சிற்பிகள் உட்பட சுமார் 700 பேர் இந்த கல்வெட்டுப்பணிகளில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று குறள் மலைச்சங்கத் தலைவர் பா.இரவிக்குமார் கூறினார்.








1 comment:

  1. அய்யா,
    வணக்கம்.சிறக்கட்டும் தங்களது தமிழ்க் குறள்மலைப் பணி..

    ReplyDelete